பேரூர்:குப்பனூரில், வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் டி.வி.,யை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.குப்பனூர், கோல்டன் நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 31. தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த, 3 மாதமாக, ஹரிபிரசாத் வேலை காரணமாக சென்னை சென்று விட்டார்.கடந்த, 12ம் தேதி, உறவினர் வீட்டிற்கு பெற்றோரும் சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஹரிபிரசாத்தின் பக்கத்துவீட்டுக்காரர், ஹரிபிரசாத்தை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, ஹரிபிரசாத்தின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.ஹரிபிரசாத் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 1.75 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த டி.வி., மாயமாகியிருந்தது. அவரது புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.