நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பையடுத்து, பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள சுவர்கள், சென்டர் மீடியன்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் போஸ்டர்களை அகற்றும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம், நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அரசியல் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அகற்றும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டன.ஆனால், கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.கிணத்துக்கடவு நகரம், பகவதிபாளையம், சிங்கராம்பாளையம், எஸ்.எம்.பி.,நகர், மணிகண்டபுரம் பகுதிகளிலும், நெகமம் பேரூராட்சியில்,பெரியநெகமம், சின்னேரிபாளையம், எம்.ஜி.ஆர்.,நகர், காளியப்பம்பாளையம் மற்றும் ரங்கம்புதுார் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பணி துவங்கியது.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள, அரசியல் தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டன. பொது இடங்களில் வைத்திருந்த கட்சி கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டன. விரைவில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக, தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.உடுமலைநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, உடுமலை நகராட்சி பகுதிகளிலுள்ள, அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ்பேனர்கள் மற்றும் போஸ்டர்கள், சுகாதாரத்துறை மற்றும் நகரமைப்பு துறை அதிகாரிகளால் நேற்று அகற்றப்பட்டது.--- நிருபர் குழு -