வால்பாறை:வனத்தீ தடுப்பு மேலாண்மை குறித்த பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்தின் காரணமாக வனப்பகுதியில் தீ பரவும் வாய்ப்புக்கள்உள்ளன.பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வனக்காவல் பகுதிகளில் பணிபுரியும் அனைத்து முன் கள பணியாளர்களுக்கு, தீ தடுப்பு மேலாண்மை குறித்த பயிற்சி அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று காலை பயிற்சி நடந்தது.பொள்ளாச்சி வனப்பாதுகாப்பு படையை சேர்ந்த விஜயன், வனப்பகுதியில் தீ ஏற்பட காரணங்கள் மற்றும் பதிவு செய்யும் முறை குறித்து தெரிவித்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ராமசந்திரன், தீ ஏற்படும் விதம் மற்றும் அதனை தடுக்க கையாளப்பட வேண்டிய முறைகள் குறித்தும்; வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர் வசந்தி, வனத்தீ ஏற்படும் போது பணியாளர்கள் கையாள வேண்டிய முதலுதவி குறித்தும் தெரிவித்தனர்.சிறப்பு பயிற்றுனர் லோகநாதன், கம்பியில்லா தந்தி கருவி பயன்படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார்கள். மேலும் பயிற்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட ஆறு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.மேலும் தீ தடுப்பு காலங்களில், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள, 18 பழங்குடியின கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் உதவ வேண்டுமென, கேட்டுக்கொள்வதோடு துண்டு பிரசுரம் வாயிலாக, வனப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் செய்திருந்தனர்.