அன்னூர்:தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள், இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.தமிழக அரசு, ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்ய, 'தாலிக்கு தங்கம்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த, ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள பெண்ணின் திருமணத்திற்கு, 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.பட்டப்படிப்பு படித்த பெண்ணின் திருமணத்துக்கு, 8 கிராம் தங்கமும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஆதார், சாதிச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் பணம் கிடைக்கவில்லை, என, கூறுகின்றனர்.இதுகுறித்து அன்னூர் பேரூராட்சியை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கூறியதாவது :தாலிக்கு தங்கம் திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் திருமணம் முடித்து விட்டோம்.ஆனால் விண்ணப்பித்து, இரண்டரை ஆண்டுகளாக, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிறோம். 2019, ஆகஸ்ட். மாதம் வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு விண்ணப்பித்தோர், 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறோம், எங்களில் பலருக்கு குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இன்னும் அரசு அறிவித்த தங்கமும், ரொக்கமும் வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக தொழில் மந்த நிலை, சம்பளம் குறைவு என பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.இந்த சூழ்நிலையில் அரசு திருமண உதவித் தொகையையும் தங்கமும் வழங்கினால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அன்னூர் மக்கள் தெரிவித்தனர்.