கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை, மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து, 45 இடங்களில் பறக்கும் படையினர், 24 மணி நேரமும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் என, 45 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள், தண்டையார்பேட்டை மண்டலத்தில், 57 ஆயிரத்து 350 ரூபாயை பறிமுதல் செய்தனர்.மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மற்றும் அதன் 5 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் மட்டும், பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்ட 3,193 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.அதேபோல், தனியார் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த, 1,089 அரசியல் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் இருந்த முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்களையும், செய்தி தாள்களை வைத்து, மாநகராட்சி பணியாளர்கள் மறைத்துள்ளனர். தொடர்ந்து அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அகற்றம், முதல்வர் புகைப்படம் மறைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளில் மாதவரம் மண்டலத்தில், 32 வார்டில் போட்டியிட, சுயேச்சை வேட்பாளர் கார்த்திக், ஆலந்துார் மண்டலம், 158வது வார்டில், விஜயா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், பல்வேறு மண்டலங்களில் சுயேச்சைகள் பலர், வேட்பு மனு படிவங்களை பெற்று சென்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தொடர்ந்து அகற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.தேர்தல் தொடர்பான புகார்களை, 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கவும், http://election.chennaicorporation.gov.in/gcculb22/complaints/ என்ற இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வழிக்காட்டுதல்படி, அவ்வப்போது, சென்னையில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -