நுங்கம்பாக்கம், : வீரபத்திரன் தெருவில், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, முறையாக அமைக்கப்படாததை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை சரி செய்ய ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில், புதிதாக தார் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை, ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில், 16 லட்சம் ரூபாய் செலவில், சிமென்ட் கான்கிரீட் சாலையை ஒப்பந்ததாரர்கள் அமைத்தனர். ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, முறையாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சாலை சரியாக அமைக்கப்படாததால், ஒப்பந்ததாரரை அழைத்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய உத்தரவிட்டனர். கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.ஓரிரு நாட்களில் சாலையை முறையாக அமைத்து தருவதாக, ஒப்பந்ததாரர் தெரிவித்தார். பணிகள் துவங்கியுள்ளன.இதே போல் மற்ற மண்டலங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுத்திஉள்ளனர்.