ராதா நகர் ரயில்வே சுரங்க பாதை கட்டுமான பணி மீண்டும் துவங்கியது.தாம்பரம் - கடற்கரை புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், குரோம்பேட்டை நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. இந்நிலையத்திற்கு அருகில், ராதா நகர் சாலை ரயில்வே கேட் உள்ளது.குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து ராதா நகருக்கும்; ராதா நகரில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலைக்கும் ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு, சில சமயங்களில் 20 நிமிடங்கள் வரை பொது மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது
.இதை தவிர்க்க, ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து ராதா நகர் சாலை வரை, ரயில்வே கேட் பகுதியில் 15.47 கோடி ரூபாய் செலவில், இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்தது.ராதா நகர் சாலையில் வீடு, கடைகள் வைத்திருக்கும் 28 பேர், சுரங்கப்பாதையால் பாதிக்கப்படுவதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை பெற்றனர்.இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. வழக்கில், உயர் நீதிமன்றம் 2018ல் தடை நீக்கி, கட்டுமான பணி தொடர்வதற்கு உத்தரவிட்டது.இதையடுத்து 2019ல் சுரங்கப்பாதை கட்டுமான பணி மீண்டும் துவக்கப்பட்டது. ரயில் பாதைக்கு கீழ் சுரங்கப்பாதை பணி முடிந்தது.
ராதா நகர் சாலையில், அக்டோபர் மாதத்தில் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.இது குறித்து, ரயில்வே கட்டுமான பிரிவு அதிகாரியிடம் கேட்டதற்கு, 'ரயில்வே இடத்தில் சுரங்க பாதை அமைக்கும் பணி முடிந்து, ராதா நகர் சாலை மற்றும் மேற்கு பக்கம் ஜி.எஸ்.டி., சாலை இணைப்பு சுரங்கப்பாதை பணி மட்டும் பாக்கியுள்ளது.தற்போது ராதா நகர் சாலை சுரங்க பாதை பணி நடக்கிறது. சாலை சுரங்கப்பாதை பணியை, விரைவாக நடத்துவதற்கும் ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.கட்டுமான பணி ஒப்பந்ததாரரை கேட்டதற்கு, 'சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் பணி நிறுத்தப்பட்டது. தற்போது துவக்கப்பட்டுள்ள பணி முடிக்க மூன்று மாதங்கள் வரை ஆகும்' என்றார். - நமது நிருபர் -