குடும்ப பிரச்னையில் கணவர் தற்கொலை
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையைச் சேர்ந்த விமல், 25, சின்னத்திரையில், லைட்மேனாக வேலை செய்தார்.இவரது மனைவி சரண்யா, 28. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஒன்பது மாதங்களாக, ஓட்டேரியில் உள்ள தாய் வீட்டில், சரண்யா குழந்தையுடன் வசிக்கிறார். இதனால், விமல் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, வீட்டு மாடியில் இருந்த மரக்கிளையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லிவாக்கம் போலீசார் விமல் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரி, 30; இவரது மனைவி ஜீவிதா, 24. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகிறது.தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்றும் இதுபோல், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் பீரோ கண்ணாடியை கையால் உடைத்ததில், அரிக்கு காயம் ஏற்பட்டது. பின், அவர் வீட்டை விட்டு கிளம்பினார்.மீண்டும் வீட்டுக்கு வந்த போது, ஜீவிதாவை காணவில்லை. குளியறையில் பார்த்த போது, உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு, ஜீவிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாலிபரை வெட்டிய 3 ரவுடிகள் கைதுஅண்ணா நகர்: அயனாவரத்தைச் சேர்ந்த சிவா, 22, கடந்த 22ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு, அவரது நண்பர் சிலம்பரசன் என்பவருடன், இருசக்க ர வாகனத்தில் அண்ணா நகர் வழியாக சென்றார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், சிவாவை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். காயமடைந்த சிவாவை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதல்கட்ட விசாரணையில், அயனாவரத்தை சேர்ந்த ரவுடி கிருபாகரன், 23, என்பவர், 2019ல் சிவாவை தாக்கியதால், இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இதன் காரணமாக, தற்போது சிவாவை வெட்டியது தெரிந்துள்ளது. அண்ணா நகர் போலீசார் விசாரித்து, தொடர்புடைய அண்ணா நகர், அன்னை சத்யா நகரை சேர்ந்த ராபர்ட், 23, இவரது தம்பி ஜோசப், 20, மற்றும் குட்டி, 20, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், முக்கிய குற்றவாளியான கிருபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.'போக்சோ'வில் வாலிபருக்கு சிறைஎம்.கே.பி.நகர்: கொடுங்கையூர், விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 39. இவர், அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்துகிறார்.அதே பகுதியில் டிபன் கடை நடத்தும், 40 வயது பெண்ணின் ௧௪ வயது மகள், தாய்க்கு உதவி செய்ய அடிக்கடி கடைக்கு வந்து சென்றுள்ளார்.இந்நிலையில், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, நேற்று ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற கார்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுமி, தாயிடம் நடந்ததை கூற, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கார்த்திகேயன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, 'போக்சோ'வில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புழல்: சென்னை, புழலைச் சேர்ந்தவர் சுபான் பாஷா, 32; வாஷிங் மிஷின் மெக்கானிக். இவர், புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள ஒரு வீட்டில், வாஷிங் மிஷின் சர்வீஸ் செய்ய சென்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம், தகாத உறவானது. இதையடுத்து, அந்த பெண்ணின், 15 வயது மகளிடமும் பேசிப் பழகிய சுபான் பாஷா, சிறுமியின் மொபைல்போன் நம்பரை வாங்கியுள்ளார். அதன் மூலம் ஆபாச படம் அனுப்பி, சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அளித்த புகாரின்படி விசாரித்த மாதவரம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று மாலை சுபான் பாஷாவை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.கஞ்சா வியாபாரிகள் கைதுசென்னை: சென்னையில் போலீசார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக, 'டிரைவ் அகைன்ஸ்ட் ட்ரக்ஸ்' என பெயரிட்டு, சிறப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், இம்மாதம், 21 முதல் 27 வரையிலான ஏழு நாட்களில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வியாசர்பாடியைச் சேர்ந்த தினகராஜ், 27, இவரது மனைவி பிரியா, 26, உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 81 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.