தி.நகர் : தி.நகர் பிரதான சாலையில், அடுத்தடுத்து விழுந்த பள்ளங்கள் சீர் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டில், பிருந்தாவன் தெரு உள்ளது. இது, மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளை தி.நகருடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.கடந்த அக்., 6ம் தேதி, பிருந்தாவன் தெருவில், துரைசாமி சுரங்கப்பாதை அருகே, மண் சரிவால் பள்ளம் ஏற்பட்டது. அப்பள்ளம் சீர் செய்யப்பட்ட நிலையில், பிருந்தாவன் தெரு மற்றும் லட்சுமி நாராயணன் தெரு அருகே, டிசம்பர் 13ம் தேதி பாதாள சாக்கடை 'மேன் ஹோல்' சரிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது.அப்பள்ளத்தை சீர் செய்யும் பணி நடந்து வந்த நிலையில், அதே பிருந்தாவன் தெரு மற்றும் தம்பையா தெரு அருகே, டிசம்பர் 15ம் தேதி மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. பிருந்தாவன் தெரு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் நடந்து வந்தன. பிருந்தாவன் தெருவில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இப்பள்ளத்தை சீர் செய்யும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.