ஆர்.கே.பேட்டை : அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், விடுமுறை நாட்களில் வெளிநபர்கள், பள்ளி வளாகத்தில் கொட்டம் அடிக்கின்றனர். சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, விடியங்காடு கிராமத்தில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது.கிராமத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த பள்ளியில், விடியங்காடு, வெங்கடாபுரம், பெரியநாகபூண்டி, பீமாரெட்டியூர், பெரிய ராமாபுரம், தாமரைகுளம், தேவலாம்பாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், 450 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.
வடக்கு திசையில் சுற்றுச்சுவர் உள்ளது.ஆனால், தெற்கு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லை. இரண்டு நுழைவாயில்களில் உள்ள கதவுகளும் பூட்டப்படுவது இல்லை.திறந்தநிலையில் உள்ள நுழைவாயில்கள் மற்றும் தெற்கு பகுதி வழியாக, வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கொட்டம் அடிக்கின்றனர்.இதனால், பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நுழைவாயில்களில் உள்ள கதவுகளை பூட்டவும், தெற்கு திசையில் சுற்றுச்சுவர் ஏற்படுத்தவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.