காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த பட்டியலில் தங்கள் பெயர் இருக்குமா என, கட்சியினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டத்தில், கடந்த அக்டோபரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் உள்ளனர்.இதையடுத்து நகர்ப்புற தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முயற்சித்து வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின், பிப்., 19ல் தேர்தல் நடக்கிறது.மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு நகராட்சிகள், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஆயுள்
இதற்காக 384 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன. 1,700 கட்டுப்பாட்டு இயந்திரமும், ஓட்டுப்பதிவு இயந்திரமும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், இந்த தேர்தலுக்கு, 460 இயந்திரங்களே போதுமானது என்பதால், 460 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், முதற்கட்ட பரிசோதனைகளை முடித்து, தயார் நிலையில் இருக்கின்றன.இத்தேர்தலில் ஓட்டளிக்க மாவட்டத்தில் 1.33 லட்சம் ஆண்கள், 1.42 லட்சம் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் என, மொத்தம் 2.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் அந்தந்த தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என உறுதி செய்துள்ளனர்.அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில், வேட்பு மனு தாக்கல், நேற்று ஆரம்பித்துள்ளது; பிப்., 4ல் நிறைவு பெறுகிறது.தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில் தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்பு மனுக்களை பெற்று மனு அளித்தோரிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
போட்டி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம், 51 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிட தி.மு.க., சார்பில், 105 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.அதேபோல் மேயர் பதவிக்கு, நான்கு முதலியார் சமூகத்தைச் சேர்ந்தோரும், இரு வன்னியர் சமூகத்தை சேர்ந்தோரின் பெயர்கள், கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் கட்சிக்குள் கடும் போட்டி இருந்தாலும் தலைமை அறிவித்த வேட்பாளர்தான் மனு தாக்கல் செய்ய முடியும்.
மேலும், அந்தந்த பகுதிகளில் ஏற்கனவே வார்டு கவுன்சிலராக இருந்த பலர், இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.கட்சி சார்பில் நடத்தப்பட்ட நேர்காணலில், விருப்ப மனு அளித்தோரிடம், 'கட்சி பதவி, எத்தனை காலம் கட்சியில் இருக்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட்டது. அதேசமயம், கட்சிக்கு உழைத்தவர்களுக்கும் சீட் கிடைக்கும் என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில், ம.நீ.ம., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பிப்., 1 முதல் பெறப்பட உள்ளதாக அக்கட்சி வடமேற்கு மாவட்ட செயலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் தேர்தலுக்கான நேர்காணல், அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது.விருப்ப மனு கொடுத்த 90 பேரிடம் நேர்காணல் நடந்தது. அவர்களிடம், தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என, ஆலோசனை கூறினர்.
விருப்பம்
பா.ம.க.,வில் காஞ்சி புரம் மாநகராட்சிக்கு 118 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்த முறை தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுக்கு, தி.மு.க.,வில் 45 விருப்ப மனுக்கள், அ.தி.மு.க.,வில் 70 விருப்ப மனுக்கள் கட்சியினரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகள், பேரூராட்களில், கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சியினர், கட்சி வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்குமா என, மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
மாமல்லபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் அமைந்து, வாக்காளர்கள் உள்ளனர். இதன் தலைவர் பதவி, 1996 - 2011 ஆண்டு தேர்தல்களில், பொதுப்பிரிவாக ஒதுக்கப்பட்டது.கடந்த 2016ல் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் நடந்தபோது, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் ஏற்பாட்டில், மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்ற கருதி, எஸ்.சி., பொதுப்பிரிவிற்கு மாற்றியதாக கூறப்பட்டது. தற்போதும், இப்பிரிவே, ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வில், தலைவர் பதவிக்கு தகுந்த வேட்பாளர் இல்லாத சூழலில், ஒருவரை பெயரளவிற்கு நிறுத்தும் கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியின் ம.தி.மு.க., சார்பில், முன்னாள் தலைவர் சத்யா, தான் அல்லது மனைவி போட்டியிட விரும்பி, தி.மு.க., தலைமையிடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வில், முன்னாள் தலைவர் எஸ்வந்த்ராவ் அல்லது மனைவி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இப்பதவி கவுன்சிலர் வேட்பாளர்களை, இப்பகுதியினர் விறுவிறுப்புடன் எதிர்பார்த்துள்ளனர்.
கூட்டணிக்கு எத்தனை 'சீட்'
தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளான காங்., - வி.சி., - இரு கம்யூ., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கும்போது தி.மு.க., அதிகப்படியான சீட்டுகளை வைத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்கு மற்ற சீட்டுகளை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.அந்தந்த மாவட்ட செயலர்களே இதற்காக முடிவு எடுப்பார்கள் என, கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி பதவிக்கு 40 - 45 சீட்டுகளில் தி.மு.க., போட்டியிடும் என நம்பப்படுகிறது.
- நமது நிருபர் குழு -