ஆர்.கே.பேட்டை : சாலையோரத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு, செறிவூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முறையான மூடி பொருத்தப்படாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமாபுரம், சுந்தரராஜபுரம் கிராமங்கள், திருத்தணி கூட்டு சாலையில் இருந்து ராமாபுரம் வழியாக சந்திரவிலாசபுரம் கிராமத்திற்கு தார் சாலை வசதி உள்ளது.இதில், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் உள்ள ஆழ்துளை கிணறு, நீர்மட்டம் குறைந்ததால், அதை ஒட்டி, செறிவூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஆழ்துளை கிணறுக்கு முறையாக, பி.வி.சி., மூடி பொருத்தப்படாமல், சிறு கல் வைத்து மூடப்பட்டுள்ளது.இந்த கல், விலங்குகளால் அகற்றப்பட நேர்ந்தால், ஆழ்துளை கிணறு திறந்தநிலைக்கு வந்து விடும். இதனால், இந்த வழியாக நடந்து செல்பவர்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழும் முன், ஆழ்துளை கிணறை முறையாக மூடி போட்டு பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.