காஞ்சிபுரம் : கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இம்மாதம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தரிசனத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், பக்தர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்து பெற்று விளங்கும் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் ஆகிய கோவில்களுக்கு, பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்தரிசனத்திற்கு செல்வர்.இம்மாதம் துவக்கத்திலே கொரோனா தொற்று அதிகரித்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு, அரசு தடை விதித்தது. தொடர்ந்து கோவில்கள் மூடப்பட்டதால், கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல், தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது. வழக்கம் போல் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. எப்படியும் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடத்துவர்; தேர்தல் பிரசாரம் செய்வர். கோவிலை மூடினால் இந்த நேரத்தில் ஹிந்துக்கள் ஓட்டுகள் பாதிக்கும் என கருதி, சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். எப்படியோ கோவில்கள் திறக்கப்பட்டது நல்லது தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.