திருமழிசை : திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மனு வாங்க மற்றும் கொடுக்க வருபவர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என, போலீஸ் துணை ஆணையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகள் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று முதல் வேட்பு மனு வழங்கும் பணி துவங்கியது.பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தேர்தல் நடத்தும் அலுவலரும், தலா, ஐந்து வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் அலுவலர் என, மூன்று உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று துவங்கிய வேட்பு மனு வழங்கும் பணியை, ஆவடி மாநகர காவல் துணை ஆணையாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.அவர் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு வாங்க மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களை கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகமாக வரும் நேரத்தில் 'டோக்கன்' வழங்கி ஒருவர் பின் ஒருவராக வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.வெள்ளவேடு காவல் ஆய்வாளர் அன்புசெல்வி தலைமையில், வெள்ளவேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.