திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேர்தலுக்கான வேட்பு மனு, நேற்று துவங்கியது. மாவட்டம் முழுதும், 318 மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், ஒன்றிய, ஊராட்சி பிரதிநிதிகள், தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. நகர்ப்புற தேர்தல் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் அறிவிக்கையை, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சி; திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி நகராட்சிகள்; திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிக்குப்பம், பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை என, எட்டு பேரூராட்சிகளில், 318 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மனு தாக்கல் துவக்கம்
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், வேட்பு மனு தாக்கல், நேற்று துவங்கியது. மனுக்களை, அந்தந்த அலுவலகங்களில் பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவியாக, 47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நேற்று, 28ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. பிப்., 4ம் தேதி வரை வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை, பிப்., 5ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற, பிப்., 7ம் தேதி கடைசி நாள். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.ஓட்டுப்பதிவு, பிப்., 19ம்தேதி நடைபெறும். பதிவான ஓட்டுக்கள், பிப்., 22ம் தேதி எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள், மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது.அதன் பின், மறைமுக தேர்தல் மூலம், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், மார்ச் 4ம் தேதி நடைபெறும்.
வேட்பாளர்கள் தேர்வு
தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி சார்பில், வார்டு ஒதுக்கீடு செய்யும் பணியில், அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.கூட்டணி சார்பில் போட்டியிடும் இடங்கள், தேர்வு செய்யும் பணி இன்னும் முடிவு பெறவில்லை. வார்டு ஒதுக்கீடு முடிந்ததும், பிரதான கட்சி வேட்பாளர்கள், அமாவாசை தினமான, வரும் 31ம் தேதி முதல், வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். முதல் நாளான நேற்று, வேட்பு மனுக்களை போட்டியிட விரும்புவோர், வாங்கிச் சென்றுள்ளனர்.
பறக்கும் படை அமைப்பதில் தாமதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி, தேர்தல் நடைபெறும் ஆவடி மாநகராட்சி, ஆறு நகராட்சி மற்றும் எட்டு பேரூராட்சிகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் மட்டும் எடுத்துச் செல்லலாம். கூடுதலாக பணம் எடுத்துச் செல்வோரை கண்காணிக்க, பறக்கும் படை நியமிக்க வேண்டும். ஆனால், இதுவரை, பறக்கும் படையினர் யாரும் நியமிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்களும், இது குறித்து எவ்வித முடிவும் செய்யவில்லை என தெரிவித்தனர்.