காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று துவங்கியது; பிப்., 4ம் தேதி வரை, அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பெறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் 15 வார்டுகளில் போட்டியிட, பேரூராட்சி அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து, வேட்பு மனுவை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேட்பு மனுவை வாங்க வந்தோரிடம் உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி வழங்கி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பேரூராட்சியின் வெளியே தடுப்பு அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், இரு வார்டு ஆதிதிராவிடர் பொதுப்பிரிவினர்; மூன்று வார்டு ஆதிதிராவிடர் பெண்கள் பிரிவு; ஐந்து வார்டு பொதுப்பிரிவு பெண்கள்; ஐந்து வார்டு பொதுப்பிரிவினர் என, மொத்தம், 15 வார்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நேற்று மனு தாக்கல் துவக்க நாளில், மனுக்களை வாங்கி செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அ.தி.மு.க., - தி.மு.க., என, இரு கட்சியினரும், முன்மொழிவு படிவங்களை வாங்கி சென்றனர். வேட்பாளர்களுக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுரை கூறினர்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், முதல் நாளான நேற்று, 30 சுயேச்சைகள் வந்து விருப்ப மனு பெற்றுச்சென்றனர். காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணி வரை ராகு காலம் என்பதால் யாரும் வரவில்லை. சுயேச்சை வேட்பாளர்களை தவிர மற்ற கட்சி வேட்பாளர்கள் யாரும் வரவில்லை.நகராட்சி அலுவலகத்திற்கு வந்தோருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதித்த போலீசார், சானிடைசர் கொடுத்து, விசாரணைக்கு பின்னரே, உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இடைக்கழிநாடு பேரூராட்சியின் 21 வார்டுகளுக்கு போட்டியிட, 25 பேர் வேட்புமனு பெற்று சென்றனர். எழுத்தரிடம் ஒரு ரூபாய் மட்டும் செலுத்தி விண்ணப்ப படிவத்தை வாங்கினர்.மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளில், அதன் செயல் அலுவலர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.நேற்று அலுவலகங்களில் தேர்தல் மற்றும் வார்டுகள் இட ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது. 11:00 மணி கடந்து, ஊழியர்களிடம் பலர் வேட்புமனு பெற்று, விபரம் கேட்டறிந்தனர்.
போலீசார் பாதுகாப்பிற்கு இருந்தனர். பறக்கும் படையினர் நகர் பகுதிகளில் கண்காணித்தனர்.அலுவலக பகுதியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, அலுவலக பகுதியிலிருந்து, நாற்புற சாலைகளில், 100 மீ., தொலைவிற்கு தடைவிதித்து, அடையாள கோடிட்டனர்.3 பேர் மட்டுமே அனுமதிமாமல்லபுரத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அனைத்து கட்சியினர் கூட்டம் நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது:தேர்தலில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டுமே, வேட்புமனு அளிக்கலாம். வேட்பாளருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் சார்பாக வேறு நபர் வேட்பு மனு அளிக்கலாம். முதல்தள அலுவலகத்தில், வேட்புமனு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வேட்பாளராக இருந்தால், நாங்களே கீழே வந்து பெறுவோம்.பிரசாரத்திற்கு கூட்டமாக செல்லாமல், வேட்பாளர் உட்பட மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும். கூட்டம் நடத்த அனுமதியில்லை; இது நீதிமன்ற உத்தரவு. வழிகாட்டு முறையில் மாற்றம் இருந்தால், பின்னர் தெரிவிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -