மதுராந்தகம் : நெல்வாய் சுற்று வட்டார கிராமங்களில், பாவை, புடலை உள்ளிட்ட கொடி வகையிலான காய், கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுராந்தகம் ஒன்றியம், நெல்வாய், மங்கலம், இந்திராபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், கடந்த ஆண்டுகளில் நெல் மற்றும் தானிய வகையிலான பயிர்களே அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.சில மாதங்களாக, தானிய வகையிலான பயிர்களில் இருந்து, தோட்ட பயிர் சாகுபடிக்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி உள்ளனர்.கடந்த மாதம் பெய்த பருவ மழைக்கு முன்னரே, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய் போன்ற கொடி வகையிலான பயிர்களை நடவு செய்தனர்.
தற்போது, பருவ மழை காலம் முடிந்துள்ள நிலையில், வளமாக வளர்ந்து, செடிகளில் கணிசமான அளவிற்கு காய் பிடித்துள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஒரு மாற்றத்திற்காக தோட்ட பயிர் சாகுபடி மேற்கொண்டுள்ளோம். இங்கு விளைகிற காய்கறிகளை, அறுவடைக்கு பின் செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதி சந்தைகளில், விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.