-சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 100 வார்டுகள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்குள்ள, ஆறு மண்டலங்களில், இம்முறை ஆண்களை விட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பெண் கவுன்சிலர்கள் அதிகம் உள்ள மண்டலங்களில், மண்டல குழு தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது, அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் உள்பட, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பிப்ரவரி 19ல் நடக்கவுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இதில், 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 16 வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும், 84 வார்டுகள் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 100 வார்டுகளில், எஸ்.சி., பொது பிரிவில் ௧௬ வார்டுகளும், பொது பிரிவில் 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வார்டுகள் தவிர, மீதமுள்ள பொது வார்டுகளிலும் பெண்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இதனால், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழலில் உள்ள கட்சி நிர்வாகிகள், தங்கள் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை களம் இறக்கவும் வாய்ப்புள்ளது.இதன்படி, சென்னை மாநகராட்சி தேர்தலில், 100க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய ஒதுக்கீட்டின்படி, ஆறு மண்டலங்களில், ஆண்களை விட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இதில், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 18ல், 13 வார்டுகள் பெண்களுக்கும்; திரு.வி.க.,நகர் மண்டலத்தில் உள்ள 15ல், 11 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தண்டையார்பேட்டை, அம்பத்துார், அண்ணாநகர் மற்றும் ஆலந்துார் மண்டலங்களில் உள்ள மொத்த வார்டுகளில், பாதிக்கு மேல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், அந்த மண்டலங்களில் பெண் கவுன்சிலர்கள் கோலோச்சும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு குறைந்த வார்டுகள் ஒதுக்கீடு உள்ளதாக, மணலி மண்டலம் உள்ளது. இங்கு மொத்தமுள்ள ஏழு வார்டுகளில், ஒன்று மட்டும் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.அதேபோல், ஒன்பது வார்டுகள் உடைய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், இரண்டு மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.கோடம்பாக்கம் மண்டலத்தில், மொத்தமுள்ள, 16 வார்டுகளில், ஆண்டுகளுக்கு 10 ஒதுக்கப்பட்டு உள்ளன. ராயபுரத்தில் உள்ள, 15 வார்டுகளில், ஆண்களுக்கு ஒன்பது ஒதுக்கப்பட்டு உள்ளன. சென்னை மேயர் பதவி, இம்முறை பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், மண்டல குழு தலைவர் பதவியிலும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, ஆறு மண்டலங்களில், ஆண் கவுன்சிலர்களை விட, பெண் கவுன்சிலர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால், குறைந்தபட்சம், இந்த ஆறு மண்டலங்களிலாவது மண்டல குழு தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுவரை, மண்டல குழு தலைவர் பதவியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், இம்முறையாவது, அந்த பதவியை பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திஉள்ளனர். பெண்கள் எண்ணிக்கையை வைத்து, மண்டலக்குழு தலைவராக பெண்களை நியமிக்க அரசாணை இல்லை. அரசியல் கட்சிகள் வேண்டுமானால், பெண்களும் உயர் பதவிகளில் வர வேண்டும் என்ற கொள்கையில், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்; அரசும் கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.- மாநகராட்சி அதிகாரிகள்ஆண்களுக்கு ஈடாக சிறந்த நிர்வாகம் அளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. இதற்கு முன், கட்சிகளில் ஆண்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்ததால், அவர்களை மண்டலக்குழு தலைவராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த தேர்தலில், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. மண்டலக்குழு தலைவராக பெண்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.-முன்னாள் பெண் கவுன்சிலர். - -நமது நிருபர்-