புவனகிரி : புவனகிரி தேர்வு நிலை பேரூராட்சி சேர்மன் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கியதால், ஒன்றிய கவுன்சிலர் சீட் பெற கடும் போட்டி அதிகரித்துள்ளது.
புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளில், 7 வார்டுகள் பெண்கள் மற்றும் 7 பொதுப் பிரிவிற்கும், எஸ்.சி., பிரிவில் 2 பெண்கள், 2 ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 8,825 ஆண்கள்; 9,204 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உட்பட 18 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை தலைவர் பதவி எஸ்.சி., பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர் சீட் கேட்டு கட்சியினர் தலைமையில் முகாமிட்டுள்ளனர். நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அருள்முருகன், உதவி அலுவலர்கள் வேல்முருகன் மற்றும் கனகசபை உள்ளிட்ட அதிகாரிகள், வேட்பு மனுக்கள் பெற ஆயத்தமாக இருந்தனர். ஒருவர் கூட நேற்று மனு தாக்கல் செய்ய வில்லை. போலீஸ் நிலையம், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் சான்றுகள் பெற, கூட்டம் அலை மோதியது.கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், எதிர்பார்த்த வார்டு மற்றும் சீட் கிடைக்காவிட்டால் பலர் சுயேச்சையாக போட்டியிடும் சூழல் உள்ளது.
தலைவர் பதவியை பிடிக்க, கவுன்சிலருக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் சீட் கேட்டு தலைமையில் முகாமிட்டுள்ளதால் போட்டி அதிகரித்துள்ளது. அமாவாசை புவனகிரி பேரூராட்சியில் நேற்று ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை. வரும் 31 ம் தேதி அமாவாசை தினம் என்பதால் கூட்டணி ஒதுக்கீடு முடிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய பலரும் ஆயத்தமாகி வருகின்றனர்.