எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி 36.30 கோடி! முதல் தவணை ஒதுக்கி முதல்வர் உத்தரவு | செய்திகள் | Dinamalar
எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி 36.30 கோடி! முதல் தவணை ஒதுக்கி முதல்வர் உத்தரவு
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : நியமன எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 33 எம்.எல்.ஏ.,க்களுக்கு 36.30 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது.எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகளை கண்டறிந்து, அதை தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்திட பரிந்துரை செய்து, நிதி பெறுவர்.பெரும்பாலும் தொகுதியில் சாலை, வடிகால் வாய்க்கால், சிறிய அளவிலான கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்படுகிறது.கடந்த காங்., ஆட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியாக உயர்த்தி தரப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, 2016, 2017, 2018 ஆண்டுகளில் தலா ஒரு கோடி மட்டுமே வழங்கப்பட்டது.அதன் பிறகு 2019ல் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியும், ஏற்கனவே செய்த பணிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டு முழுவதும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை.என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியாமல் இருந்தது.

கடந்த நவம்பர் மாதம் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை தலா 2 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து தற்போது 33 எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2021--22 நிதியாண்டிற்கு 36 கோடியே 30 லட்சம் ரூபாயை உள்ளாட்சித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட உள்ள 2 கோடியில் தலா 1.10 கோடி ரூபாய் வீதம் முதல் தவணையாக தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றிப்பெற்ற 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு 33 கோடி ரூபாயும், 3 நியமன எம்.எல்.ஏ., க்களுக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாயும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில், தொகுதி மக்கள் சாலை, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். ஆனால், தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாததால் எம்.எல்.ஏ.,க்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.இது சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.,க்களில் 16 பேர் தோல்வியை தழுவினர். தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காதது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.இதேபோன்று மாநிலம் முழுவதும் சாலைகள் அனைத்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பொதுமக்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சாலைகளை எப்போது சரி செய்வீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.எல்.ஏ.,க்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.தற்போது தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், 2021-22ம் நிதியாண்டு முடிய இரண்டு மாதங்களே உள்ளன. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில் சாலை, கழிவு நீர் வாய்க்காலுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை முழு வீச்சில் துவங்க உள்ளனர். இனி,அனைத்து தொகுதிகளிலும் சாலை பணிக்கான பூமி பூஜைகள் களை கட்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X