அடிப்படை வசதிகள் செய்ய, பொதுமக்களிடம் 'கட்டிங்' கேட்காத கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சென்னை மாதவரம் மண்டலத்தில், 22 முதல் 33வது வார்டு வரை உள்ளது. அங்கு, மாதவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. அதன் கட்டுப்பாட்டில், 44 குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளன. அவற்றில், 50 ஆயிரம் வாக்காளர்கள் வரை உள்ளனர்.இந்நிலையில், வரும் தேர்தலில், அடிப்படை வசதிகள் செய்ய 'கட்டிங்' கேட்காத கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க, இந்த பகுதி வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் நீலக்கண்ணன் கூறியதாவது:தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது.எங்கள் பகுதி கவுன்சிலராக பொறுப்பேற்பவர், தன் பதவியின் மூலம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடக் கூடாது. அவரது வார்டுக்குட்பட்ட அடிப்படை வசதி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இதற்காக, மாதம் ஒரு முறையாவது, வார்டு சபை கூட்டம் நடத்தி, மக்களை சந்தித்துப் பேச வேண்டும்.பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மூலம் அளிக்கப்படும் பொது பிரச்னைகள் குறித்த மனுக்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மறைமுகமாகவோ, நேரடியாக அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது.குறிப்பாக, வீடு கட்டுமான பணிகளுக்காக ஜல்லி, செங்கல் ஆகியவற்றை வீட்டருகே இறக்கி வைத்தால், அதற்காக நேரடியாகவோ, உதவியாளர்கள் மூலம் மறைமுகமாகவோ, 'கட்டிங்' கேட்க கூடாது. மேற்கண்ட தகுதி உடையவரையே, எங்கள் ஏரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.