திண்டிவனம் : கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் என்.ஓ.சி., சான்றிதழ் கட்டாயம் என்பதால், வரி பாக்கியை அரசியல் பிரமுகர்கள் கட்டியதன் மூலம், திண்டிவனம் நகராட்சிக்கு 4 லட்சம் ரூபாய் நிலுவை வரி வசூலானது.திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், வேட்பு மனு தாக்கலின் போது, நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், குத்தகை பாக்கி முழுதும் செலுத்திவிட்டேன் என அறிவிக்கும் என்.ஓ.சி., (ஆட்சேபணை இல்லாத சான்றிதழ்) இணைக்க வேண்டும்.
இதற்காக அரசியல் கட்சிகள் சார்பில் மற்றும் சுயேச்சையாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் என்.ஓ.சி., பெறுவதற்காக கடந்த 2 நாட்களாக திண்டிவனம் நகராட்சியை முற்றுகையிட்டு வருகின்றனர்.இதில் நேற்று முன்தினம் மட்டும் என்.ஓ.சி.,க்காக 74 பேரும், நேற்று 58 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் நகராட்சிக்கு 1,84,000 ரூபாய் சொத்து வரியாகவும், வாடகை பாக்கியாக 2 லட்சம் ரூபாயும், குடிநீர் வரியாக 21 ஆயிரம் ரூபாயும் செலுத்தினர். இதன் மூலம் நகராட்சிக்கு 4 லட்சம் ரூபாய் வரை வரி வசூலாகியுள்ளது.நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட என்.ஓ.சி., கட்டாயம் என்பதால், அரசியல் பிரமுகர்கள் பலர் போட்டி போட்டிக்கொண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.