சிதம்பரம், : சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., -தி.மு.க., நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது. சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு, 1986 ல் தி.மு.க., சார்பில் துரை கலியமூர்த்தி நகராட்சி சேர்மனாக பதவி வகித்தார். பின்பு 1996 ல் தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., சந்திரபாண்டியன் சேர்மனாக இருந்தார்.
அடுத்து, 2001 ல் அ.தி.மு.க., சார்பில் எம்.எஸ்.என்.குமார் தலைரவாக பதவி வகித்தார். 2006 தேர்தலில் சிதம்பரம் நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மா.கம்யூ., பவுஜியா பேகம் தலைவனார். 2001 ல் அ.தி.மு.க., சார்பில் நிர்மலா சுந்தர் சேர்மன் ஆனார். 1991 ல் இருந்து இரு முறை அ.தி.மு.க., ஒரு முறை தி.மு.க., தலைவர் பதவியை வைத்திருந்தது. மற்ற தேர்தல்களில் இரு கட்சிகளுமே கூட்டணிகளுக்கு விட்டுக் கொடுத்தது.இந்நிலையில், வரும் தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளுமே தலைவர் பதவியை கூட்டணிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது. சிதம்பரம் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ., வாக அ.தி.மு.க., பாண்டியன் உள்ளார். தி.மு.க., கூட்டணி கட்சியான இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளரை தோற்கடித்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டவர்.
இதனால் ஆளும்கட்சிக்கு ஈடு கொடுக்க தயாராகி வருகிறார். தி.மு.க., வும் நகராட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முடிவுடன் தேர்தல் களத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்து மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், இரு கட்சிகளிலும் கூட்டணி கட்சியினருக்கு வார்டு ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அனைத்து கட்சியினரும் நேற்று காலை முதலே சிதம்பரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். நகராட்சியை கைப்பற்ற தி.மு.க.,- அ.தி.மு.க., நேரடியாக களத்தில் இறங்கியதால் சிதம்பரம் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.