கடலுார் : கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என, அரசியல் கட்சியினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தமிழக மாநில தேர்தல் ஆணையம், வரும் பிப்., 19ம் தேதி, நகர்ப்புற தேர்தல் நடத்தப்படும் என, அறிவித்தது. அறிவிப்பு வெளியான 26 ம் தேதி மாலையே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, பொதுமக்கள் அரசியல் கட்சியினர், நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, கடலுார் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிப்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங் ஆலோசனை நடத்தினார்.அவர் பேசுகையில், அரசியல் கட்சிகள் தனி நபர்களுக்கு சொந்தமான கட்டடங்கள், சுவர்களில் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நடுதல், விளம்பரம் செய்ய கூடாது, மசூதி, சர்ச், கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது, தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.ஜாதி, சமூக உணர்வுகளைத் துாண்டும் வகையில் வேண்டுகோள் விடுக்கக் கூடாது. தேர்தல் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.
வாக்காளருக்கு லஞ்சம், வெகுமதி தரக் கூடாது. தேசிய கொடி, தேசிய சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது. பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு ரூ,17 ஆயிரம் நகராட்சி கவுன்சிலர் (முதல் மற்றும் இரண்டாம் நிலை) பதவியிடத்திற்கு ரூ.34 ஆயிரம், நகராட்சி (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) பதவியிடத்திற்கு ரூ.85 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர் ரூ.85 ஆயிரம், செலவு செய்யலாம். தேர்தல் பிரசாரத்திற்கு உரிய அனுமதி பெற்றபின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை காலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 வரை மட்டுமே பயன்படுத்தலாம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வேட்பு மனுத்தாக்கலின் போது வேட்பாளர் மட்டுமே மனு செய்ய அனுமதிக்கப்படுவார். அவருடன் சேர்த்து 2 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்,
வீடு வீடாக ஒட்டு சேகரிக்கும் போது வேட்பாளரையும் சேர்த்து மூன்று நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என, கேட்டுக்கொண்டார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.