பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், 83 முழுநேர மற்றும் 54 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. அவற்றில், 52 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமற்று இருப்பதாக, கடந்த காலங்களில் ஏராளமான புகார்கள் எழுந்தன.இதனால், புகார்களின் அடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவின் பேரில், கார்டுதாரர்களுக்கு மட்டமான அரிசிக்கு பதில் நல்ல அரசி வினியோகிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் பழுப்பு நிற அரிசி வழங்கப்படுவதால், கார்டுதாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'சாமளாபுரம் பள்ளபாளையம் கேபி/036 ரேஷன் கடையில், பழுப்பு நிறத்தில் மட்டமான ரேஷன் அரிசி வினியோகிக்கின்றனர். தரமின்றி உள்ள இந்த அரிசியை எப்படி சமைப்பது என்று தெரியவில்லை. சில மாதங்களாக நல்ல அரிசி வழங்கப்பட்டு வந்தது. திடீரென மீண்டும் பழுப்பு அரிசி வருகிறது. மீண்டும் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.