பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, இரு மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணியை, எவ்வித பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மேற்கொள்வதால், வாகன ஓட்டுனர்கள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர்.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, தமிழகம் - கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். மாநில நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தில் உள்ள இந்த ரோட்டை, ஜமீன் முத்துாரில் இருந்து, தமிழக எல்லையான கோபாலபுரம் வரை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டுள்ளது.முக்கிய ரோடு விரிவாக்கப்படுவது மகிழ்ச்சியளித்தாலும், பாதுகாப்பின்றி பணி மேற்கொள்வது அனைவரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரோட்டில், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள் இரவு பகலாக பயணிக்கும் நிலையில், விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது.பணி மேற்கொள்ளும் போது, வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், பாலக்காடு ரோட்டில், எந்த இடத்தில் ரோடு தோண்டப்பட்டுள்ளது, பள்ளம் உள்ளது, கற்கள் பரப்பப்பட்டுள்ளன என்பது அன்றாடம் பயணிக்கும் உள்ளூர்வாசிகளுக்கே தெரியாத நிலை நிலவுகிறது.சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் அமைத்து விட்டு, எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், தினமும் விபத்துகள் நிகழ்வதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், விதிமீறலை கண்டும், காணாமலும் இருப்பது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இனியும் விதிமுறைகளை கடைபிடித்து, ஒப்பந்ததாரர் தரப்பில் முன்னறிவிப்புகள் வைத்து, பணி மேற்கொள்ளாவிட்டால், போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக பொதுநல அமைப்புகள் எச்சரிக்கின்றன. அதிகாரிகள் அதற்கு வாய்ப்பு அளிக்காமல், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.