பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பையை குவித்து எரிப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர், வெப்ஜியார் லே -- அவுட், குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளன. இங்குள்ள, இரண்டாவது வீதியில் குப்பையை குவித்து எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:குமரன் நகர், வெப்ஜியார் லே -- அவுட் பகுதிகளில், வீடுகள் தோறும் பெறப்படும் குப்பை, மூட்டையாக கட்டி ரோட்டோரம் குவிக்கப்படுகின்றன. குடியிருப்பு பகுதியில் மூட்டை, மூட்டையாக குப்பையை குவித்து வைப்பதுடன், பணியாளர்கள் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். புகை மூட்டத்தால், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், குப்பையை குவிப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.இது குறித்து, பல முறை புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தொற்று நோய்கள் பரவி வரும் சூழலில், சுகாதாரம் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.