உடுமலை:உடுமலை பகுதியில், பி.எஸ்.என்.எல்., சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மொபைல் வாடிக்கையாளர்கள் பாதித்தனர்; அரசு அலுவலகங்களில், பல்வேறு பணிகள் முற்றிலுமாக முடங்கியது.உடுமலை நாராயணன் காலனி பகுதியில், நகராட்சி சார்பில், மழை நீர் வடிகால் கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக குழி தோண்டிய போது, பி.எஸ்.என்.எல்., 'ஆப்டிக் பைபர் கேபிள்' நேற்று காலை துண்டிக்கப்பட்டது.இதனால், உடுமலை நகரிலும், சுற்றுப்பகுதிகளிலும், பி.எஸ்.என்.எல்., சேவைகள் அனைத்தும் முடங்கியது.மொபைல் டவர்களுடன் இணைப்புள்ள, கேபிள் துண்டிக்கப்பட்டதால், காலை, 9:00 மணி முதல் மொபைல் போன்களிலும், சிக்னல் கிடைக்கவில்லை; மேலும், இன்டர்நெட் இணைப்புகளும் செயலிழந்தன. மொபைல்போனில் முற்றிலுமாக சிக்னல் கிடைக்காததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை தாலுகா அலுவலகம், நகராட்சி உட்பட அரசு அலுவலகங்களில், சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் உட்பட பணிகள் முற்றிலுமாக முடங்கின.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, நகராட்சி அலுவலகத்தில், டிபாசிட் தொகை கட்ட சென்றவர்களும், 'சர்வர்' கிடைக்காததால், ஏமாற்றமடைந்தனர். அரசு அலுவலகங்களில், மாற்று ஏற்பாடு செய்யவும், பல மணி நேரம் இழுபறி நீடித்தது.இதே போல், பி.எஸ்.என்.எல்.,லுடன் இணைக்கப்பட்டுள்ள, அரசு கேபிள் வாரிய 'செட்டாப் பாக்ஸ்'கள் இயங்கவில்லை. வீடுகளில், இணையதள சேவையும், கிடைக்கவில்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கேபிள் சந்தாதாரர்கள், நேற்று, இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பாதிப்படைந்தனர்.இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பல மணி நேரம் போராடி நேற்று மாலையில், சீரமைப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு, சேவைகள் சீரடைந்தது.நேற்று காலை முதல், உடுமலை பகுதியில், பி.எஸ்.என்.எல்., சேவை கிடைக்காததால், ஏற்பட்ட பாதிப்புகள் மக்களிடையே பரபரப்பான பேச்சாக இருந்தது. மாலை வழக்கம் போல், 'நெட்வொர்க்' கிடைத்ததும், மக்கள் நிம்மதியடைந்தனர்.