சிவகங்கை, ஜன.29மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்காததால்விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டதில் 2021நவ., டிசம்பரில் அதிகளவு மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த வைகை, உப்பாறு,சருகனியாறு, பாலாறு, மணிமுத்தாறு, விருசுழியாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் நிலைகளில் கண்மாய், குளங்கள், ஊரணிகள் நிரம்பின. இதன் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு 6038 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும், என அறிவித்தது. இன்று வரை சிவகங்கை விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறுகின்றனர்.வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போதைய அரசு எக்டேருக்கு 6038 தான் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு இன்று வரை அதுவும் வழங்கப்படவில்லை, என்றார்.வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாககரையோரங்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. மொத்தமாக மாவட்டத்தில் 191 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதில் 31 எக்டேர் பயிர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்கியுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கும் நிவாரணம் விரைவில் அரசு வழங்கும் என்றார்.----------