உடுமலை:உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம்-7 ன் கீழ், 98,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், கடந்த இரு ஆண்டுகளாக, விவசாய நிலங்கள், தொழில் நிறுவன வளாகங்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் ஊராட்சிகள் சார்பில், குளம், குட்டை கரைகள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.கடந்த, வனத்துக்குள் திருப்பூர் திட்டம்-6 ன் கீழ், 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஒரு ஆண்டு மரமாக வளர்ந்துள்ளது. கடந்த, ஜூன் முதல் வனத்துக்குள் திருப்பூர் -7 திட்டம் துவக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை, 98 ஆயிரத்து, 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நேற்று பூலாங்கிணர் விவசாயி பிரபுக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, குமிழ், சந்தனம், செம்மரம், புங்கன், நாவல் என, 338 மரக்கன்றுகள் நடப்பட்டது.