சிங்கம்புணரி-சிங்கம்புணரியில் கட்டப்பட்ட பாலங்கள் 10 ஆண்டுகளில் பஞ்சர் ஆவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டி, முறையூர் பகுதிகளில் பாலாற்றில் கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்ததால் வெள்ள காலங்களில் போக்குவரத்து தடைபடுகிறது. அந்த இடங்களில் 2010 --11 ம் ஆண்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதேபோல் சிலநீர்பட்டி செல்லும் வழியில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் சேதம் ஆனதால் அங்கும் புதிய பாலம் கட்டப்பட்டது.முறையூர் பாலம் 10 ஆண்டுகளில் அடிக்கடி சேதமடைந்து பல்லாங்குழி ஆக மாறி விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பள்ளங்கள் உருவாகி அவற்றை அதிகாரிகள் சரிசெய்த நிலையில் தற்போது மீண்டும் பாலத்தில் பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் நுழைவுவாயில் அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் அங்கும் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே பாலத்தில் உருவான பள்ளங்களை சரிசெய்து தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் அமைப்பதுடன், இனி வரும் காலங்களில் பாலம் கட்டுமானங்கள் தரமாக அமைவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.