கூடலுார்:முதுமலை மசினகுடி அருகே, பசுமாட்டை தாக்கி கொன்ற புலி குறித்து வனத்துறையினர், 10 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு வந்த புலி, அப்பாஸ் என்பவரின் பசு மாட்டை தாக்கி கொன்றது.மக்கள் கூறுகையில்,'கூடலுார் மற்றும் மசினகுடியில் மூன்று மாதங்களுக்கு முன், 16க்கும் மேற்பட்டமாடுகள், நான்கு பேரை கொன்ற, 'டி-23' புலியை, 21 நாட்கள் தேடுதலுக்கு பின், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது, இப்பகுதியில், மீண்டும் ஒரு புலி, பசுமாட்டை கொன்றுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.