இத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், தேர்தல் அலுவலர் சதீஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின் கலெக்டர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலுக்காக 16 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு நடக்கிறது. தேர்தல் விதிமுறைகள், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும். விதிமீறில்களை கண்டறிய 11 பறக்கும் படைகள் செயல்பட துவங்கின. மாநகராட்சி 4 மண்டலங்களிலும் தலா ஒன்று, மூன்று நகராட்சிகளில் தலா ஒன்று, ஒன்பது பேரூராட்சிகளில் நான்கு பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.ஜன., 5 வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல், துணை பட்டியல் அனைத்து கட்சியினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 15 லட்சத்து 73 ஆயிரத்து 289 வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர். மதுரை பாத்திமா கல்லுாரி, வக்பு வாரிய கல்லுாரி, பெண்கள் பாலிடெக்னிக், அரசு ஆண்கள் பாலிடெக்னிக்கில் மாநகராட்சியில் பதிவான ஓட்டுக்கள், மூன்று நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மையங்களில் அங்கு பதிவான ஓட்டுக்கள், பரவை, பேரையூரில் பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும்.மாவட்டத்தில் 200 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
அங்கு மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்படுவர். தேர்தல் நடத்தை விதிகள் நகர்ப்புறத்தையொட்டி ஐந்து கி.மீ., சுற்றளவுக்கு அமலில் இருக்கும். வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். மூன்று நபர்களுடன் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்வோர் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றார்.கட்டுப்பாட்டு அறைமதுரை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டது. தேர்தல் விதிமீறல்கள், குறைகள், புகார்கள் குறித்து இந்த அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7865 ல் தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும்.