திருப்பரங்குன்றம், -திருப்பரங்குன்றம் பகுதிகளில் நெல் அறுவடை செய்ய இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.சிவராமன், தென்பழஞ்சி: இங்குள்ள மானாவாரி கண்மாய் 11 ஆண்டுகளுக்கு பின்பு மழை நீரால் நிரம்பியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் நெல் நடவு செய்ததில் அறுவடைக்கு தயாராகி விட்டது. சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நிலங்கள் ஈரமானது. தவிர கண்மாய் ஒட்டி உள்ள நிலங்களில் ஊற்று அடிப்பதால் ஈரப்பதம் உள்ளது. மண் நன்றாக காய்ந்த நிலங்களில் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் டயர் இயந்திரங்கள் ஈரமான நிலங்களில் இறங்கினால் பதிந்து கொள்ளும். அதனால் அவை கதிர் அறுக்க வர மறுக்கின்றன.இந்நிலங்களில் செயின் இயந்திரங்கள் மூலம் மட்டுமே அறுவடை செய்ய முடியும். அதை பயன்படுத்தினால் வைக்கோல் முழுவதும் வீணாகிவிடும். இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யவில்லை எனில் நெல் மணிகள் உதிர்ந்து வீணாகிவிடும். வைக்கோல் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நெற்பயிர்களையாவது காப்பாற்றலாம் என்றால் செயின் வண்டிகளும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.மானாவாரி பகுதி மட்டுமின்றி மற்ற கண்மாய் பகுதிகளிலும் பெரும்பாலான நிலங்களில் ஈரப்பதம் இருப்பதால் செயின் இயந்திரங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கிறோம். விரைவில் அறுவடை செய்யவில்லை என்றால் பெருத்த நஷ்டம் ஏற்படும். முன்புபோல் கையால் அறுவடை செய்ய ஆட்கள் இல்லாததால் இயந்திரங்களை மட்டுமே நாட வேண்டிய நிலை உள்ளது என்றார்.