வாடிப்பட்டி-வாடிப்பட்டியில் வைகை பெரியாறு பாசனத்தில் சாகுபடி செய்துள்ள இருபோகத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுக்கு முன் அறிவிப்பின்றி பொங்கலன்று பாசனத்தை நிறுத்தினர். தற்போது முறைவைத்து வழங்குவதாக தெரிவிக்கின்றனர். திருமங்கலம் கால்வாய்க்கு அறிவித்த 120 நாளுக்கு கூடுதலாக 165 நாள் பாசனம் வழங்கப்பட் வருகிறது. அணையில் தேவைக்கு அதிகமாக நீர் உள்ளதால் 140 நாள் நெல் ரகத்தை நடவு செய்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன்: நீர் திறக்கும் நாட்கள் குறித்து அதிகாரிகள் உறுதியான தகவல் தர வேண்டும். முறை வைத்து தண்ணீர் அடைக்கும் நாட்கள் குறைவாகவும், திறக்கும் நாட்கள் அதிகமாகவும் பாசனம் கிடைத்தால் மட்டுமே கடைமடை பகுதி பயிர்களை காப்பாற்ற முடியும், என்றார்.