திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 486 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்கள் என மொத்தம் 54 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. நேற்று (ஜன.28) முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.
தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான வார்டு பங்கீடு இறுதி செய்யாததால் அவர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. சொந்த விருப்பப்படி போட்டியிடும் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை காத்திருந்த தேர்தல் அலுவலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.நல்ல நேரம் எப்போதுஇன்று (ஜன.29) சனி தேய்பிறை பிரதோஷம். நல்ல நேரம் காலை 7:30 முதல் 8:30 மணி வரை, மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை கவுரி நல்ல நேரம் இருப்பதால் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்ய வரலாம். நாளை (ஜன.30) ஞாயிறு விடுமுறை மனுத்தாக்கல் கிடையாது.
ஜன.31 திங்கள் தை அமாவாசை. பிப்.1 அமாவாசை மறுநாள் இந்நாட்களில் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பிப்.2 ம் தேதி வரை நல்ல நேரம் குறைவாகவே உள்ளது. இதனால் பிப்.3 ம் தேதி வியாழன் காலை 10:30 முதல் 11:30 மணி வரை நல்ல நேரம். மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை கவுரி நல்ல நேரம். இந்நாளில் தி.மு.க.,வினர், அ.தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பிப்.4 ம் தேதி மனு தாக்கல் கடைசி என்பதால் மாற்று வேட்பாளர் மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.