திருப்பூர்: உள்ளாட்சி வேட்பாளருக்கு, தொற்று ஏற்பட்டால், சமூக வலைதளங்கள் வாயிலாக மட்டுமே, பிரசாரம் செய்ய வேண்டு மென, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நடக்கும் அலுவலகத்தை சுற்றிலும், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் நாட்கள் வரை, தினமும் 'மாஸ் கிளீனிங்' நடைபெறும். அதற்காக, சுகாதார ஆய்வாளர் தலைமையில், தனி சுகாதாரக்குழு அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி, இரண்டு 'டோஸ்' செலுத்தியவர் மட்டுமே, ஓட்டுச்சாவடி அலுவலராகவும், ஓட்டு எண்ணிக்கை அலுவலராகவும் இடம்பெற முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
மனுதாக்கலுக்கு முன்னதாக, தொற்று உறுதி செய்யப்பட்டால், முன்மொழியும் நபர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பாளர், மூன்று நபர்களுடன் மட்டும் சென்று பிரசாரம் செய்யலாம்.
வீடு வீடாக சென்று, ஆதரவு திரட்டும் போது, கட்டாயமாக மூன்று பேர் மட்டுமே உடனிருக்க வேண்டும்.வேட்பாளருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் நேரடியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய அனுமதியில்லை.
வேட்பாளர், வீட்டில் தனிமையான சூழலில் இருந்து சிகிச்சை பெற வேண்டும்.தனது வார்டுக்கு உட்பட்ட வாக்காளரிடம்,சமூக வலைதளங்கள் வாயிலாக மட்டுமே ஆதரவு திரட்ட வேண்டும் என மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.