கோவை: ''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறினார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், மொத்தம் 15 லட்சத்து, 61 ஆயிரத்து, 819 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க, ஐந்து மண்டலங்களில் தலா மூன்று வீதம், 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி பகுதிகளில், 1,290 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், 169 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணிகளில், 6,192 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.ஓட்டுப்பதிவுக்கு, 1,548 கன்ட்ரோல் யூனிட், 3,612 'பேலட் யூனிட்' இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தேர்தல் குறித்து மக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க, 0422 2300132 என்ற கட்டுப்பாட்டு அறை எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாற்றுப்பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் ஒரு வேட்பாளர், 85 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக செலவு செய்யலாம். தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நடத்தை விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.