அவிநாசி: அவிநாசி அருகே, பழமை வாய்ந்த சிலைகள் திருடப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
'திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, அய்யம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகளான வேப்ப மரம் இருந்தது. மரத்தையொட்டி பழமையான சிவலிங்கம், நந்தி சிலை நிறுவப்பட்டிருந்தது. தனியார் சிலர், மரத்தை வெட்டியதுடன், சிலையையும் கடத்தியுள்ளனர்' என, அனுமன் சேனா சார்பில், வருவாய்த்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது.
மனுவை விசாரித்த வருவாய்த் துறையினர், 'பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் பழமையான மரம் இருந்தது. மரத்தடியில், மக்கள் பூஜித்து வந்தனர். நில உரிமையாளர், தனது நிலத்தை சுற்றி வேலி அமைக்கும்போது மரம் சாய்ந்து விட்டது என கூறினார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது' எனக்கூறி புகாரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு புகார் அனுப்பியதன் அடிப்படையில், நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., ராஜேந்திரன் மேற்பார்வையில், அந்த இடத்தை அகழ்வு இயந்திர உதவியுடன் தோண்டி, கோவில், சிலை இருந்ததற்கான அடையாளம் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
அனுமன் சேனா மாநில பொது செயலாளர் தியாகராஜன் கூறுகையில், ''ஊர் மக்கள் பராமரிப்பில் இருந்த பழமை வாய்ந்த மரத்தடியில், நந்திசிலையும், சிவலிங்கமும் இருந்தன. தனியார் சிலர் 'லே அவுட்' அமைத்தனர். அப்போது, மரத்தை வெட்டி, சிலைகளை கடத்தி விட்டனர். வருவாய்த்துறை, உள்ளூர் போலீசாரிடம் மனு வழங்கியும் பலன் இல்லாததால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மனு வழங்கினேன்; அதனடிப்படையில் விசாரிக்கின்றனர்,'' என்றார்.