தென் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் 4,428; வட சென்னையில் திருவொற்றியூர் கார்கில் நகரில் 1,200 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பெரும்பாக்கத்தில், 614 கோடி ரூபாயில், 4,428 வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாக்கத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்ட, 200 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக, 1,200 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து, 926 வீடுகள் கட்டப் பட்டு உள்ளன.இதில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாம் கட்டமாக, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 4,428 வீடுகள் கட்ட, 614 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 493 கோடி ரூபாயில், 3,276 வீடுகள் கட்டப்படுகின்றன.
இத்திட்டத்தில், ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பில், எட்டு மாடியில் கட்டப்படுகிறது. வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை, குளியல் அறை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.மேலும், மத்திய அரசின் 'லைட் ஹவுஸ்' திட்டத்தில், 121 கோடி ரூபாயில், 1,152 வீடுகள் கட்டப்படுகின்றன.இந்த வீடுகள், கட்டடத்தின் பாகங்களை தனி இடத்தில் தயாரித்து, அதை கட்டுமான தளத்தில் கொண்டு சென்று, 'பிரிகாஸ்ட்' முறையில் கட்டப்படுகிறது.இந்த பணிகள், முடியும் தருவாயில் உள்ளன. மீதமுள்ள பணிகளை, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர், கார்கில் நகரில், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, ஜூலையில் முடிய வாய்ப்புள்ளதாக, அதிகாரி ஒருவர் கூறினார்.திருவொற்றியூர் மேற்கு பகுதி, அம்பேத்கர் நகர், கலைஞர் நகர், கார்கில் நகர், அண்ணாமலை நகர், அண்ணா நகர், ராஜாஜி நகர், ராஜா சண்முகம் நகர், சண்முகபுரம், சரஸ்வதி நகர் என, 30க்கும் மேற்பட்ட நகர்களில், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தின், 6 - 7 ஆகிய இரு வார்டுகள், நான்காவது வார்டின் ஒரு பகுதியும், இதில் அடங்கும்.வடக்கே மணலி விரைவு சாலை, கிழக்கே ரயில்வே தண்டவாளம், தெற்கே மாட்டு மந்தை மேம்பாலம், மேற்கே பகிங்ஹாம் கால்வாய் தடுப்பு சுவர் மற்றும் தார் என, உயரமான எல்லைகள் நடுவே, திருவொற்றியூர் மேற்கு பகுதி, 1 - 5 அடி பள்ளத்தில் தாழ்வாக உள்ளது.
வெள்ளம்
மழைக் காலங்களில், மேற்கு பகுதியில் தேங்கும் மழை நீர், கால்வாய்கள் வழியாக, கார்கில் நகருக்கு வந்து, அங்குள்ள 15 ஏக்கர் கழிவெளி நிலத்தில் தேங்கி, பின் மதகுகள் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும்.
கடந்த 2015ம் ஆண்டு கொட்டி தீர்த்த பெருமழையால், மேற்கு பகுதி முற்றிலும் பாதித்தது. தவிர, புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்து விடப்பட்ட, 90 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான உபரி நீர் கடலில் உள்வாங்காமல், பகிங்ஹாம் கால்வாய் வழியாக பின்னோக்கி ஏறியது. மேலும், மதகுகள் வழியாக, மேற்கு பகுதியை மூழ்கடித்தது. ௫ அடிக்கு தேங்கி நின்ற வெள்ள நீர், கார்கில் நகர் கழிவெளி நிலம் வழியாக தான் மெல்ல வடிந்தது. அப்போது, மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிகாரிகள், இந்நிலத்தின் முக்கியத்துவம் அறிந்திருந்தனர்.
இதனிடையே, 2018ம் ஆண்டு, தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்றழைக்கப் படும் குடிசை மாற்று வாரியத்தால், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கின.ஏற்கனவே, இங்கு பெரும்பாலான வீடுகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என, நோட்டீஸ் வழங்கி காலி செய்ய அறிவுறுத்தியிருந்த நிலையில், 15 அடுக்குமாடி உடைய குடியிருப்புகள் கட்டப்படுவது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
'மைவான்'
தண்ணீர் தேங்கி நிற்கும் இடம் என்பதால், பல மாடி கட்டடம் கட்டுவது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும் எனக்கூறி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என, பல தரப்பினரும் போராட்டம் நடத்தினர். பின், அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
இதற்கிடையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வந்தன. அதன்படி, ஜெர்மனின் 'மைவான்' தொழில்நுட்பத்தில், முழுதும் கான்கிரீட் பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.நான்கு தொகுப்புகளாக கட்டப்பட்ட குடியிருப்புகளில், தொகுப்பு ஒன்றில், தளம் ஒன்றிற்கு, 20 வீடுகள் வீதம், 15 தளத்திற்கு 300 வீடுகள் என, மொத்தம் 1,200 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.மேலும், கார் பார்க்கிங், தொகுப்பு ஒன்றிற்கு, நான்கு மின் துாக்கிகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வீடு ஒன்றின் விலை, 13.93 லட்சம் ரூபாயாகும். மத்திய - மாநில அரசின் மானியமான, 7.50 லட்சம் ரூபாய் போக, 6.43 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.குடியிருப்பு ஒன்று, 410 சதுர அடியில், வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும், ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், கழிவெளி நிலத்தில், 130 கோடி ரூபாயில், பன்னடுக்கு குடியிருப்புகள் கட்டப்படும் நிலையில், சிலரிடம் ஏமாந்து இடம் வாங்கிய தங்களை, காலி செய்ய கோருவது எந்த விதத்தில் நியாயம் என, அருகே வசிப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- நமது நிருபர் குழு -