புதுச்சேரி : அச்சக உரிமையாளரிடம் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தும் 'சாப்ட்வேர்' பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி மதுபான கடையில் மார்ச் 7ம் தேதி, மதுபானம் வாங்கி ரூ.500 கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கில், பிள்ளை தோட்டம் ஜெயபால், மனோஜ் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில், சரண், என்.ஆர்.காங்., பிரமுகர் கமல், சென்னையைச் சேர்ந்த தமீன் அன்சாரி, நாகூர் மீரான் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, ரூ. 2.42 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.கள்ள நோட்டு தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை கொடுத்த ஊட்டி அச்சக உரிமையாளர் தாமஸ் அமலோற்பவராஜ், கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.தாமஸ் அமலோற்பவ ராஜை உருளையன்பேட்டை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.விசாரணை முடிந்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.போலீஸ் காவல் விசாரணையின்போது கிடைத்த தகவலின்பேரில், கள்ள நோட்டு அச்சிட பயன்படுத்திய 'சாப்ட்வேர்' மற்றும் மொபைல் போன்களை தாமஸ் அமலோற்பவராஜ் வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த சாப்ட்வேர் மூலம் கள்ள நோட்டுக்களை எளிதாக, ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல அச்சிட முடியும் என போலீசார் தெரிவித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட சாப்ட்வேர், மொபைல் போன்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.