குன்னுார்:குப்பை மேலாண்மை பூங்காவில், பூத்து குலுங்கும் மலர்கள் துப்புரவு தொழிலாளர்களை குதூகலப்படுத்துகிறது.நீலகிரி மாவட்டம் குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பு மூலம், ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் அருகே உள்ள குப்பை கூள மேலாண்மை பூங்காவில், தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. குவிந்த குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசிய இந்த இடம், பொலிவு படுத்தப்பட்டு, பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதில், மேரிகோல்டு, ஸின்யா, ஆஸ்டர், பெட்டூனியா, பிளாக்ஸ், டயான்தஸ், பேன்சி உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் கடந்த பிப்., மாதம் நடவு செய்யப்பட்டன.இங்கு தயாரான இயற்கை உரம் இந்த மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது சீசன் துவங்கிய நிலையில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இங்குள்ள மக்கள், சுற்றுலா பயணிகள், அவ்வப்போது பார்வையிட்டு செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள், இவற்றை அறிந்து தங்களது இடங்களில், இதேபோல மேற்கொள்ள கேட்டு செல்கின்றனர்.துர்நாற்றம் வீசும் இடத்தில், மலர் வாசம் வீசுவதால், இங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.