அண்ணாநகர்:அண்ணா நகரில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன.
சென்னை அண்ணா நகர் காவல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இது குறித்து தகவலைஅடுத்து, அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 13 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்செய்த போலீசார், சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலஅதிகாரிகளுடன் இணைந்து, 13 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து துணை கமிஷனர் சிவபிரசாத் கூறுகையில், ''அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் தொடர்ந்து, அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருறோம். ''குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்தார்.