தி.மு.க., பெண் கவுன்சிலர் நெருக்கடியால் அர்ச்சகர் பணி நீக்கம்:விசாரணையின்றி கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பரிதாபம் | சேலம் செய்திகள் | Dinamalar
தி.மு.க., பெண் கவுன்சிலர் நெருக்கடியால் அர்ச்சகர் பணி நீக்கம்:விசாரணையின்றி கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பரிதாபம்
Added : மே 01, 2022 | |
Advertisement
 

சேலம்:தி.மு.க.,வை சேர்ந்த, சேலம், 40வது வார்டு பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால், சேலம் சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், எந்த விசாரணையின்றி, அவர் வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில், சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் உள்ளது.
அங்கு காலை, 7:30 மணி முதல், 11:30 மணி, மாலையில், 5:00 முதல், 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் அர்ச்சகராக பணிபுரிந்த, அதே பகுதியை சேர்ந்த கண்ணன், 32, கடந்த, 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டார்.அதில், 'இங்கு, 21 ஆண்டாக பணிபுரிகிறேன். தி.மு.க.,வை சேர்ந்த, மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளாவால் கோவிலுக்கு இடையூறு ஏற்படுகிறது. மணி அடிக்கக்கூடாது, பூஜை செய்யக்கூடாது என்பதோடு, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். செயல் அலுவலரிடம் பொய் புகார் கொடுத்து வெளியேற்றி, சாவியை வாங்க பிரச்னை செய்கிறார். இதை, வீடியோ மூலம் மக்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால், எனக்கு, குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது அனைத்தும், கவுன்சிலர் மஞ்சுளாவையே சாரும். கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, அதில் கூறியுள்ளார்.இதையடுத்து, அன்று மாலை, அர்ச்சகர் கண்ணன் கோவிலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, புது அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, அர்ச்சகர் கண்ணன் கூறியதாவது:தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா, அவரது ஆதரவாளர்களை வைத்து, நான் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டினார். இதற்கு காரணம் தெரியவில்லை. கடந்த வாரம் கோவிலுக்கு, 50 பேர் வந்தனர். அப்போது, மஞ்சுளாவின் ஆதரவாளர் ஒருவர், என்னை நெஞ்சில் குத்தி தாக்கினார்.ராமநவமியின் போது, கவுன்சிலர் கோவில் வெளியே நிற்க, அவரது ஆட்கள் வந்து, 'இரவு, 8:15 மணிக்கு மேல் மணி அடிக்கக்கூடாது; நடை சாத்த வேண்டிய நேரத்துக்கு பின் ஏன் திறக்கப்பட்டது' என கேட்டனர். சாதாராண நாளில் மட்டும் தான், வழக்கமான நேரத்தில் கோவில் நடை சாத்தப்படும். விஷேச நாளில், இரவு, 9:00 முதல், 10:30 மணி வரை ஆகும். ஆனால் அவர்கள், இரவு, 12:00 மணி வரை ‍கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது என பொய் கூறுகின்றனர். கவுன்சிலரின் ஆதரவாளர்கள், மக்கள் எனக்கூறி, என் மீது புகார் கொடுத்துள்ளனர். அதுவும், ஒரு பெண் கையை பிடித்து இழுத்ததாக, கவுன்சிலர் துாண்டுதலில் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிக்காமல் இருக்க, செயல் அலுவலர் புனிதராஜூக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, செயல் அலுவலர், என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார். எந்த காரணமின்றி, விசாரணை நடத்தாமல் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.செயல் அலுவலர் புனிதராஜ் கூறியதாவது:தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா, சேலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்த புகார்படி, நான் விசாரணை நடத்தினேன். அதில், கோவிலை பராமரிக்காதது, காலம் கடந்து நடை திறந்தது, சில பெண் பக்தர்களிடம் தவறாக நடந்ததாக கிடைத்த தகவல்படி, அர்ச்சகர் கண்ணன் நீக்கப்பட்டார். எனக்கு, இதுதொடர்பாக யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. உரிய முறையில் விசாரித்து, அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா கூறியதாவது:அர்ச்சகர் கண்ணன், இரவு, 12:00 மணிக்கு மேல் வரை, கோவில் நடையை திறந்து வைத்தார். இரவு, 10:30 மணிக்கு மேல் மணி அடிக்கிறார். இதனால் படிக்கும் மாணவர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தெரிவித்த புகார்படி, கவுன்சிலர் எனும் முறையில் மணி அடிக்க வேண்டாம் என தெரிவித்தேன். அடியாட்களை வைத்து மிரட்டுவதாக, தாக்குவதாக, கண்ணன் கூறுவது பொய். விநாயகரின் வெள்ளி கிரீடம், கவசத்தை, சாவி ஒப்படைக்கும்போது வழங்கப்படவில்லை.

இரவில் கோவில் பின்புறமாக பெண்கள் வந்து செல்கின்றனர். கோவிலில், 70 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார். இந்த அரிசியில் தான் பக்தர்களுக்கு பொங்கல் செய்து கொடுத்துள்ளார்.மண்டப வாடகை தொகை, 2,500 ரூபாய்க்கு பதில், 7,500 ரூபாய் என, ரசீது இல்லாமல் வாங்கி இருக்கிறார். கோவில் குப்பைக்கூழமாக கிடக்கிறது. இதுகுறித்து, கவுன்சிலரான என்னிடம், மக்கள் புகார் தெரிவித்தனர். அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தது, அறநிலைத்துறை அதிகாரிகள் தான். அவரை நீக்கியதால், என் மீது தேவையற்ற புகார் தெரிவிக்கிறார். அவர் தெரிவிப்பது அனைத்தும் பொய்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X