கோடை வெயிலில் இறைச்சியைப் போல், 'மயோனைஸ்' உணவிலும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், முறையாக வேக வைக்காத 'ஷவர்மா' போன்ற இறைச்சி உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய், உயிரிழப்பு அபாயம் இருப்பதாக, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
கேரளாவில் 16 வயது சிறுமி, ஷவர்மா சாப்பிட்டு, அதிலிருந்த 'ஷிகெல்லா' பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில், ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியில், பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
சமீப காலமாக, இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் நபர்கள், பல்வேறு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனனர். இதற்கு, கோடை வெயிலால் இறைச்சிகளில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்பு, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதனால், சென்னை மாவட்டத்திலுள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அப்போது, கெட்டுப்போன மற்றும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படும் வகையிலுள்ள இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவர் சதீஷ்குமார் கூறியதாவது:
ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் இறைச்சியை, குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
ஆனால், விற்பனைக்காக கடைகளில் தொங்கவிடப்படும் இறைச்சிகளில், மூன்று மணி நேரத்தில் 'ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ்' உள்ளிட்ட பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது.
இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிடும் போது, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், முறையாக வேக வைக்காமல் சாப்பிடும் போது, உடல்நல பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.
அதேபோல், ஒரு 'ஷவர்மா' தயாரிக்க, ஒன்றரை நிமிடங்களில் இருந்து இரண்டு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். சில நொடிகளில் வெட்டி எடுத்து தயாரிக்கப்படும் உணவில், பாக்டீரியா அப்படியே உயிருடன் இருந்து, அவற்றை சாப்பிடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஷவர்மாவில் 'குபூஸ்' என்ற ரொட்டி தயாரிக்கும் மைதா பயன்படுத்தப்படுகிறது. மைதா மாவில் நார்ச்சத்து கிடையாது. மைதாவை வெள்ளை நிறமாக மாற்ற, அதிகளவில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து மைதாவை உட்கொண்டால், குடல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
ஷவர்மா உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளுக்கு சேர்க்கப்படும் 'மயோனைஸ்' உணவுப் பொருள் தயாரிக்க, சமைக்காத முட்டை, எண்ணெய், வினிகர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதில், சமைக்காத முட்டையில் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது.
இறைச்சிகளை வேகவைத்த பின், பாக்டீரியா இறந்து விடும். ஆனால், தயாரித்து பல மணி நேரம் வெளியே வைக்கப்பட்டிருக்கும் 'மயோனைஸில்' அதிக பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற உணவால் உயிரிழப்புஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதைத் தவிர, சாலையோரங்களில், வாகனங்களில் இருந்து வரும் துாசி, புகை அனைத்தும், ஷவர்மாவுக்கு உபயோகிக்கும் இறைச்சியில் படிந்து விடுகிறது. அதை தயாரிப்பவரின் கையில் இருக்கும் பாக்டீரியா, உணவு வாயிலாக உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இறைச்சி விற்பனை, அசைவ உணவுகளில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம். சோதனையில், இறைச்சிகள் முறையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, இடங்கள் சுகாதாரமாக உள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்கிறோம்.
அதேபோல், அசைவ உணவு கடைகளில் உள்ள இறைச்சிகளின் தரத்தை ஆய்வு, தரமற்ற இறைச்சிகள் இருந்தால், அவற்றை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். மேலும் அந்த கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
இரண்டாவது முறை தவறு செய்தால், அக்கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவகங்களில் பொதுமக்கள் சாப்பிடும் போது, அக்கடைக்கு உணவு பாதுகாப்பு துறையின் தரச்சான்று உள்ளதா, சுகாதாரமாக உள்ளதா போன்றவற்றை கட்டாயம் பார்க்க வேண்டும்.
மேலும், உணவுகளில் அதிக அளவில் ரசாயன 'கலர் பவுடர்' கலந்துள்ளதா என்பதையும் பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும். உணவு தரம் குறித்த புகார்களுக்கு, 94440 42322 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளிர்பானங்களும் ஆபத்துகோடை வெயிலை தொடர்ந்து, பருவ கால குளிர்பான கடைகள் அதிகரித்துள்ளன. வெயில் தாகத்தில் இருந்து தப்பிக்க, அதிகளவில் குளிர்பானங்களை வாங்கி பொதுமக்கள் அருந்துகின்றனர்.
பெரும்பாலான குளிர்பானங்களில் ரசாயன 'கலர் பவுடர்' கலப்பதால், அவற்றை பருகும் போது உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்த்து இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்துமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
.
பாதிப்பு அறிகுறி என்ன?
'
ஷவர்மா' போன்ற இறைச்சி உணவுகளை உட்கொண்ட பின் வாந்தி, தலை சுற்றல், பேதி, வயிற்று வலி, உடல் வலி, பசியின்மை, செரிமான பிரச்னை, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் உரிய டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
டாக்டர் பரிந்துரையின்றி தன்னிச்சையாக மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது.- நமது நிருபர் -