சென்னை சென்னையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, 'சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டுக் குழு' உருவாக்கப்பட்டு உள்ளது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கண்ணகிநகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.இங்கு வசிப்போரின் குறைகளை நிவர்த்தி செய்யவும், இதர துறைகளுடன் சேர்ந்து கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை ஒருங்கிணைத்து வழங்கவும் வசதியாக, 'சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டுக் குழு' உருவாக்கப்பட்டு உள்ளது.இக்குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி கமிஷனரும், துணைத் தலைவராக போலீஸ் கமிஷனரும், ஒருங்கிணைப்பாளராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனரும் செயல்படுவர்.மேலும், உறுப்பினர்களாக மாவட்ட ஆட்சியர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர், சுகாதார துணை இயக்குனர் ஆகியோர் இருப்பர். மேலும், முதன்மை கல்வி அலுவலர், மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அலுவலர், தன்னார்வலர்கள், நலச்சங்கத்தினரும் உறுப்பினர்களாக இருப்பர்.இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள குடியிருப்புகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க, 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்ற திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கம் துவங்கி, அவர்களே குடியிருப்பை பராமரிக்க ஊக்குவிக்கப்படுவர். மூன்று மாத பராமரிப்பு தொகை முன்பணமாக வழங்கப்படும்.சுய உதவிக்குழு, திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு, வங்கி கடன், கல்விக்கான உரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் வழங்கப்படும். இதற்கு, சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டு குழு பக்கபலமாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.