சென்னை மாநகராட்சியின் மண்டல குழு கூட்டத்தில், பெண் கவுன்சிலர்களுடன், அவர்களின் கணவர், சகோதரர், தந்தை என, ஆண் உறவினர்களும் பங்கேற்றது மட்டுமின்றி, வீதிகளை மீறி, கவுன்சிலர்களின் இருக்கையில் அமர்ந்து அடாவடியில் ஈடுபட்டது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலிகளை அரசியல் கட்சியினர் அபகரித்ததால், கூட்டம் முடியும் வரை அமர இடம் இன்றி, அதிகாரிகள் கால் கடுக்க நின்றிருந்தனர்.சென்னை மாநகராட்சியில், நீண்ட இடைவெளிக்குப் பின், கடந்த பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சியின் 200 இடங்களில், தி.மு.க., கூட்டணி, 178 இடங்களில் வெற்றி பெற்றது.இதனால், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும், தி.மு.க.,வை சார்ந்தவர்களே இடம் பெற்றனர்.நிழல் கவுன்சிலர்மேலும், தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டதால், மொத்தமுள்ள 200 வார்டுகளில் 102 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்று, கவுன்சிலர்களாக பதவியேற்றனர்.இதில், 74வது வார்டில் பெற்றி பெற்ற, தி.மு.க., கவுன்சிலர் பிரியா மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும், மண்டல குழு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில், பெண் கவுன்சிலர்களுடன், கணவர், தந்தை, சகோதரர் என, அவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 10 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த 10 பெண் கவுன்சிலர்களுடன், அவர்களது குடும்ப ஆண் உறுப்பினர்களும், மண்டலக்குழு கூட்டத்தில் பங்கேற்றது மட்டுமின்றி, கேள்விகள் கேட்டு, கோரிக்கைகளை முன் வைத்து, நிழல் கவுன்சிலர்களாக செயல்பட்டனர்.விதிகளை மீறி, கவுன்சிலர்களின் உதவியாளர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் என, 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், மண்டலக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.அவ்வாறு கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள், அங்கு அதிகாரிகளுக்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். சர்ச்சைஇதனால், கூட்டம் முடியும் வரை, மாநகராட்சி அதிகாரிகள் சிலர், அமரக் கூட இடமின்றி கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட மண்டலங்களிலும், பெண் கவுன்சிலர்களுடன், அவர்களது நிழல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், மதிய உணவாக பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டு உள்ளது.விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'மண்டல குழு கூட்டத்தில், பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் பங்கேற்றது குறித்து, தண்டையார்பேட்டை மண்டல அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மண்டலக்குழு கூட்டத்தில், குழு தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டத்தில், வார்டுகளில் தேவையான கட்டமைப்பு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, விவாதம் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அவை, இதர கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, மாநகராட்சியின் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சியின் நிலைக்குழு பரிசீலித்து, ரிப்பன் மாளிகையில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில், தீர்மானமாக நிறைவேற்றப்படும். அதன்பின் தான், பணிகள் செயல்படுத்தப்படும். இதுபோன்ற சிறப்புமிக்க மண்டலக்குழு கூட்டத்தில், மற்ற நபர்கள் பங்கேற்க முடியாது. அவற்றை மீறி, பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.இதுதொடர்பாக, தண்டையார்பேட்டை மண்டல அலுவலர்களுக்கு, விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மண்டலக்குழு கூட்டத்தில், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க கூடாது என, அனைத்து மண்டல குழு தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். தண்டையார்பேட்டை விவகாரத்தில் விதிமீறல் உறுதிப்படுத்தப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி, மண்டலக்குழு தலைவர், மண்டல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கணவர், உறவினர்கள் தலையீடுகாஞ்சி கலெக்டர் எச்சரிக்கைஉத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுடன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ''ஊராட்சி நிர்வாகங்களில், பெண் தலைவருக்கு மாறாக, அவரது கணவர் அல்லது உறவினர்கள் தலையீடு இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் ஆர்த்தி எச்சரித்தார்.கலெக்டர் மேலும் கூறியதாவது: உள்ளாட்சி பதவிக்கான பொறுப்புக்கு தேர்வாகி உள்ள பெண் பிரதிநிதிகளுக்கு மாறாக, அவர்களது கணவர் அல்லது சகோதரர், மகன் என உறவினர்கள், ஊராட்சி நிர்வாகத்தில் செயல்படுவது சட்டப்படி குற்றம். அவ்வாறு செயல்படுவது குறித்து, என் கவனத்திற்கு வந்தால், பெண் பிரதிநிதிகள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆவடியிலும் இதே நிலை!ஆவடி மாநகராட்சியில், 48 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 25 பேர் பெண்கள். அங்கு நடந்த கூட்டத்தில், கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், கூட்டம் நடைபெறும்போது, வெளியே வருவதும், போவதுமாக இருந்தனர். ஆனால், செய்தியாளர்கள் மட்டும் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!மண்டலக்குழு கூட்டங்களில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டு சார்ந்து, கோரிக்கைகள் முன்வைப்பர். பெரும்பாலான கவுன்சிலர்கள், மண்டலக்குழு தலைவர் மீதும், மாநகராட்சி அதிகாரிகள் மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பர்.இதுபோன்ற செய்திகள், மண்டலக்குழு தலைவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பாலான மண்டலங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.