மதுரை : மதுரை மாநகராட்சியில் புதிய சொத்து வரி வசூலிக்கப்படவுள்ள நிலையில் 100 வார்டுகளில் உள்ள கட்டடங்களை மறுஅளவீடு செய்யும் பணிகள் துவங்கின.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 600 சதுரடிக்கு குறைந்த பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுரடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதம். 1201 முதல் 1800 சதுரடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதம், 1800 சதுரடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழிற்சாலை, கல்வி மைய கட்டடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைதான் இன்று வரை பல கட்டட உரிமையாளர்கள் செலுத்தி வருகிறார்கள். அதிலும் பெரியளவில் முரண்பாடுகள் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். சொத்து வரி நிர்ணயத்தில் உள்ள குளறுபடிகள் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இதைதொடர்ந்து கட்டடங்களை மறு அளவீடு செய்ய வேண்டும் என தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: புதிய சொத்து வரி நிர்ணயிக்கப்படுவதை முன்னிட்டு பழைய, புதிய வீடுகள், வணிக கட்டடங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளன. இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதற்கு பின் வரி முரண்பாடுகள் இருக்காது. மென்பொருள் 'அப்டேட்' முடிந்த பின் வரி வசூல் பணி சீராகும் என்றனர்.