பொள்ளாச்சி:தமிழகத்தில் கடந்த பிப்., மாதம் தமிழகம் முழுவதும் பணி நிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. அதில், புதிய பணியிடங்களில் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது.அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்; இல்லையெனில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம் அறிக்கை:கடந்த பிப்., மாதம் ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடந்தது.
அதில், காலிப்பணியிடங்களை தேர்வு செய்து அதற்கான ஆணைகளை பெற்று, புதிய பணியிடங்களில் ஆசிரியர்கள் சேர்ந்தனர்.மாநிலம் முழுவதும் பணியிடங்களில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.பள்ளி கல்வித்துறையில், இத்தகைய அவல நிலை, இதற்கு முன்னர் எப்போதும் நடந்தது இல்லை. காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரிந்து அவற்றை சரி செய்ய, இரண்டரை மாதங்களாகியும் முடியவில்லை.பள்ளி கல்வித்துறை மெத்தன போக்கை உடனடியாக கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, வரும், 17ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில், வரும், 18ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.