பொள்ளாச்சி:பொள்ளாச்சியிலுள்ள, பேரூராட்சிகளில் அரசு உத்தரவின் படி, ஒருங்கிணைந்த துப்புரவு திட்டம் இந்த வாரம் துவங்கப்பட்டது. இதில், பொதுமக்களும் பங்கேற்று, தங்கள் பகுதியை துாய்மை செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவிப்பின்படி, பேரூராட்சிகளில் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த துப்புரவு செய்யும் திட்டம், இந்த வாரம் துவங்கப்பட்டது.
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி ஸ்ரீசக்தி கே.சி.பி., நகர் பூங்காவில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மோதிராபுரத்தின் தெருக்களில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. நெகமம் பேரூராட்சியின் முக்கிய தெருக்களில் பேரூராட்சி தலைவர் ஆர்த்தி, செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் பணி நடந்தது.பேரூராட்சி அலுவலர்கள் கூறியதாவது:இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், வழிபாட்டு தலங்கள், பூங்கா, சந்தை உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது.பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுதல், அங்கு சுகாதார விழிப்புணர்வு ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இத்திட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக்குழுவினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களையும் ஈடுபடுத்துகின்றனர். பேரணி நடத்தி, நகரத்துாய்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து அளித்தல், திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்த்து, கழிவறைகளை பயன்படுத்துதல், பொதுச்சுவர்களை அசுத்தம் செய்யாதிருத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் செயல்பாடுகளை, புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்துதல், பிரத்யேக (swachhatha) மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்தல், அந்த செயலியை, தன்னார்வர்லர்கள், மாணவர்கள் அதிகம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.
கைகோர்க்கணும்!
ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடவடிக்கைகள் குறித்து, அன்றைய தினம் மாலை, 4:00 மணிக்குள் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டியது அந்தந்த பேரூராட்சிகளின் கடமையாகும்.பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் பகுதியில் சரியாக சுகாதாரம் பேணப்படுவதில்லை என உணர்ந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி, பேரூராட்சி நிர்வாகத்துடன் கைகோர்த்துக் கொண்டு, துப்புரவு பணிகளில் தோள் கொடுத்தால், அவரவர் பகுதி துாய்மையடையும். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள, பொதுமக்கள் முன்வர வேண்டும்.